பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாக திருகோணமலையை மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரு நாள் உத்தியோகபூர்வ இந்திய பயணத்தின் போது ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
“எமது அண்மைய வரலாற்றில் மிக சவாலான காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் மனப்பூர்வமாக நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
எமது இருதரப்பு இராஜதந்திர தொடர்புகளில் 75ஆவது வருடத்தைப் பூர்த்திசெய்யும் போது, அடுத்த சில தசாப்தங்களில் எமது எதிர்கால சந்ததியினருக்காக வழங்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் இயலுமை பற்றியும் ஆராய்தோம்.
அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுகிறது. அது சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தும்.
தலைமன்னார் – ராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை ஆகிய பகுதிளுக்கிடையிலான படகு சேவை இரு நாடுகளுக்கான கடல்வழிப் போக்குவரத்துக்கு வலு சேர்க்கும்.
புதிய மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டிய துறைகளுக்கு இருதரப்பு பொருளாதாரம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை மற்றும் – இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்ற விடயத்திற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக சேவை வழங்கல் மற்றும் தனி நபர்களை மையப்படுத்திய சேவைகளுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இலங்கை ஆர்வமாக உள்ளது.
பசுமை மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுவூட்டலுக்கான இந்தியாவுடன் கைகோர்த்துக்கொள்வது பெறுமதியான வாய்ப்பு என இலங்கை கருதுகிறது.
இந்தியாவின் ஒத்துழைப்போடு, திருகோணமலை இலங்கையின் வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாகவும் திருகோணமலையை மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும்.
இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்து இலங்கை வரையிலான பல்துறைசார் பெற்றோலிய குழாய் கட்டமைப்பொன்றை உருவாக்குவதால், இலங்கையினால் வழங்கக்கூடிய உறுதியான வலுசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதே பிரதமர் மோடியினதும் எனதும் எதிர்பார்ப்பாகும்.
மேலும் எமது மக்களின் போஷாக்கு நிலைமையை மேம்படுத்துவதற்கான பால் உற்பத்தி மற்றும் கால்நடை துறைகளில் எமது ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்தாலோசித்தோம்.
கல்வித்துறையின் ஒத்துழைப்பு எமது இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சமாக காணப்படுகிறது. இந்திய உதவியுடன் இலங்கைக்குள் புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவது முக்கியமானதென நம்புகிறோம்.
இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை – இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடுவதுடன், இலங்கை மக்களுக்கு சுபீட்சமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எனது நோக்கத்திற்கு உதவும் என நம்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.