சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முதுகெலும்புள்ள அனைத்து ஆளும் தரப்பு உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல, இந்நாட்டுக்கு பதிவு செய்யப்படாத 700 வகையான மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாம் நேற்று உலக சுகாதார ஸ்தாபனத்தில் இலங்கைக்கான அதிகாரிகளை சந்தித்தபோது, இதுதொடர்பாக வினவியிருந்தோம்.
ஆனால், உலகின் எந்தவொரு நாட்டுக்கும் தானமாகவோ, இலவசமாகவோ, பரிசாகவோ மருந்துகள் வழங்கப்படுமானால், அந்நாட்டின் சட்டத்திற்கு இணங்க, அவற்றை பதிவு செய்தே ஆக வேண்டும் என்று தெரிவித்தனர்.
அப்படியானால், சுகாதார அமைச்சர் பொய்யைக் கூறி, இந்த சபையை திசைத்திருப்பியுள்ளார். இப்படியான சுகாதார அமைச்சருக்கு எதிராக நாம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளோம்.
இதற்கு முதுகெலும்புள்ள அனைத்து ஆளும் தரப்பு உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
மருந்து ஒவ்வாமைக் காரணமாக நாட்டில் எத்தனை உயிர்கள் இல்லாமல் போயுள்ளன. ஆனால், இதுதொடர்பாக எல்லாம் இவர்களுக்கு அக்கரையில்லை.
இந்த மரணங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு அறிவிக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சின் செயலாளரினால் கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலைமைதான் மாற வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.