தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.
தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தமக்கு மாத்திரமன்றி முன்னைய ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கும் இல்லை என்பதைசுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக குறிப்பிட்டார்.
நாட்டின் முன்னேற்றத்துக்கான பொருத்தமான முன்மொழிவுகளை தான் கொண்டு வருவதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் உள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மாகாண சபை முறைமையை பேண வேண்டுமாயின், ஏற்கனவே உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திய அவர்,. விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற அடிமட்ட நடவடிக்கைகள் உட்பட தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மத்திய அரசாங்கம் நாட்டுக்கான கொள்கைகளை வகுக்கும் அதே வேளையில் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை மாகாண சபைகள் வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.