நாய்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் 6 பிள்ளைகளை அடைத்து வைத்து பெற்றோர் சித்திரவதை செய்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், தாம் பெற்ற பிள்ளைகளையே சித்திரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவரை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
2 வயது முதல் 11 வயது வரையுள்ள 6 குழந்தைகளுக்கு பெற்றோரான குறித்த இருவரும் தமது பிள்ளைகளை நீண்ட நாட்களாகத் தாக்கி வந்துள்ளதோடு அவர்களுக்கு உணவளிக்காமல் நாய் கூண்டுகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கணவர் தாக்கியதில் ஒரு பிள்ளையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதைக் கண்டு அச்சமடைந்த மனைவி அவசர உதவி எண்ணான 911ஐ அழைத்து இது குறித்துத் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த பொலிஸார் நாய்களுடன் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகள் உட்பட உணவின்றித் தவித்து வந்த 6 பிள்ளைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதன்போது அக் குழந்தைகள் உடல் முழுவதும் காயங்களுடன் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமண்டாவிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ” “நானும் அவரால் பாதிக்கப்பட்டேன். கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தன. எனது உயிருக்காகவும் எனது மற்ற குழந்தைகள் மற்றும் எனது குடும்பத்திற்காகவும் நான் பயந்ததனால் முன்னதாகவே காவல்துறையை நான் அழைக்கவில்லை. என் கணவர், பெல்டாலும், கயிறுகளாலும் மற்றும் கனம் வாய்ந்த பாத்திரங்களாலும் குழந்தைகளை அடிப்பார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.