13 இற்கு எதிரான தரப்பினரை அருகில் வைத்துக் கொண்டு, இருக்கும் நல்லிணக்கத்தையும் இல்லாது செய்யவே ஜனாதிபதி முற்படுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வகட்சி மாநாடு தொடர்பாக ஆளும் தரப்புக்குள்ளே ஒரு மித்த கருத்து கிடையாது. ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டிலும், மொட்டுக் கட்சியினர் வேறு ஒரு நிலைப்பாட்டிலும்தான் இருக்கிறார்கள்.
எமது நிலைப்பாட்டை சர்வக்கட்சி மாநாட்டில் வெளிப்படுத்த வேண்டும் என்ற தேவை மட்டும்தான் எமக்கு இருந்ததே ஒழிய, வேறு எதுவுமில்லை.
இங்கு பாரிய எதிர்ப்பார்ப்புடன் வந்தவர்கள்கூட, திருப்தியாக வெளியேறவில்லை என்பதுதான் உண்மை. நாடு இன்னமும் பொருளாதார ரீதியாக ஸ்தீரமடையவில்லை.
இவ்வாறான நிலையில், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவே நாம் முயற்சிக்க வேண்டும்.
ஆனால், தற்போது இருக்கும் ஐக்கியத்தையும் இல்லாது செய்யும் வகையிலேயே ஜனாதிபதியினால் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள்கூட, 13 ஐ கொண்டுவந்தபோது எதிர்த்தவர்கள் தான்.
அந்தவகையில், சபாநாயகர் 13 கொண்டுவரப்பட்டபோது, அப்போது அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நபராவார்.
மறுபக்கத்தில் இருந்த பிரதமர் 13 வந்தபோது, அபேராம விகாரையில் எதிர்ப்பு நடவடிக்கையில் அன்று ஈடுபட்டவர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.