வடமாகாண சுகாதார சேவைகள் துறையை மீளாய்வுக்கு உட்படுத்தி வினைத்திறனுடன் செயற்பட வைக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்எம்.சாள்ஸ் பணித்துள்ளார்.
வட மாகாணத்தில் சுகாதாரத் துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் வட மாகாண பிரதம செயலாளர், சுகாதார அமைச்சு செயலாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மற்றும் வைத்திய அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சேவை நாடுவோருக்கான சிகிச்சை, முகாமை மற்றும் புனர்வாழ்வு என்ற விடயங்கள் சுகாதார சேவை நிலையங்களில் ஒரே விதமாக நோக்கப்படலாகாது என்றும் அவை வெவ்வேறான முறைமைகள் ஊடாக அணுகவேண்டியவை என்பதை வலியுறுத்துவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் வைத்தியர்களின் விடுப்பு நேர பதிலீடு, உணவு பாதுகாப்பு, வெளிநோயாளிகள் முறையாக மருந்துகளை பெற்றுக் கொண்டு அதனை கிரமமாக உபயோகிப்பதற்கான கண்காணிப்பு, அவசர அம்புலன்ஸ் வண்டிகளின் பராமரிப்பு, சுகாதார சேவைப் பணிமனைகளின் ஊடாக வழங்கப்படும் சேவைகள், உள்ளூராட்சி மன்ற சேவைகளில் சுகாதார சேவை பணிமனைகளின் காத்திரமான ஈடுபாடு என்பன எவ்வளவு வினைத்திறனாக நடைபெறுகின்றது என்பது பற்றியும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களிடம் ஆளுநர் கேட்டறிந்ததுடன் அந்த முறைமைகள் அடிக்கடி மீளாய்வுக்குட்படுத்தி, பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறனாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வட மாகாண பிரதம செயலாளர் தூர மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ய நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்படும் என்றார்.
அத்துடன், பாடசாலைகளில் சுகாதார நிலைமைகள்பற்றிக் கேட்டறிந்த ஆளுநர், அதிகாரிகள் பாடசாலைகளில் குடிநீர், சுகாதாரம், சுத்தம், ஆரோக்கியம் என்பவற்றில் அதிக கரிசனை கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய போட்டிக்கல்வி முறை உளவியல் ரீதியான பாதிப்புகளை உருவாக்குவது பற்றியும் ஆளுநருடன் கலந்துரையாடினர். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பாக அறிந்து கொள்வதற்குரிய முறைமைகளை உருவாக்க வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வெவ்வேறு தூறையினரூம் இணைந்து செயற்பட்டு தீர்வுகளைக் காண வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் எடுத்துரைத்திருந்தார்.