இந்த ஆண்டின் இறுதியில் ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதித் தடைகள் நீக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக எதிர்கு;கட்சி தலைவர் திகைத்து காணப்படுகின்றார் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.
காரணம் இந்த நாடு முடிந்துவிட்டது, இந்த நாடு அழிந்து போக போகின்றது என்று நினைத்து அவர் மிகுந்த சந்தோஷப்பட்டார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த வகையில் இந்த நாடு வங்குரோத்து அடையாததன் காரணமாக அவர் தற்போது திகைத்து நிற்கின்றார்.
ஜனாதிபதி ஆட்சிக்கு வரும் போது இந்த நாட்டின் மத்திய வங்கியிடம் இருபது மில்லியன் டொலர்கள் மட்டுமே இருந்தன. தற்போது அது 3700 மில்லியன் டொலர்களாக மாறியுள்ளது.
300 பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. உரப் பிரச்னை இருந்தது. இந்த ஆண்டின் இறுதியில் மற்ற அனைத்து பொருட்களுக்கும் இறக்குமதி தடை நீக்கப்படும்.
வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏற்றுமதி வருவாயாக மாதத்திற்கு ஒரு பில்லியன் டொலர்களுக்கும் அதிக வருமானம் ஈட்டுகின்றோம்.
இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சமூகத்தில் தனியாக கடன் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் தவித்த நாம் தற்போது சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற்று வருகின்றோம்.
நமது நாட்டின் மீதான நம்பிக்கை உலக அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பாரிய முதலீட்டு வலயத்தை உருவாக்க தாய்லாந்து செயற்பட்டு வருகின்றது. அவர்கள் இந்த நாட்டில் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்க தயாராகி வருகின்றனர்.
உலகப் பொருளாதாரத்தில் 30 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் RCEP ஒத்துழைப்புடன் இலங்கையையும் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி தனது ஜப்பானுக்கான விஜயத்தின் போது கோரிக்கை விடுத்தார்.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம், சீனா உள்ளிட்ட 15 நாடுகள் இந்தக் குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றன.
இதற்கமைவாக உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீத சந்தைக்குள் நுழையும் திறன் எம்மிடம் இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.