நாட்டில் நிலவும் வறட்சியினால் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் 30,862 குடும்பங்களைச் சேர்ந்த 99,594 பேர் நிலவும் வரட்சியான காலநிலையால் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மட்டும் 69,000 இற்கும் மேற்பட்ட நபர்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இலங்கையில் போதிய மழை வீழ்ச்சி பதிவாகாத காரணத்தினாலேயே வரட்சியான கால நிலை நீடிப்பதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.