கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (10) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், க.கோடீஸ்வரன், கி. வெள்ளிமலை , ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் .
இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து ஞா.ஸ்ரீநேசன் பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கிழக்கு மாகாண மக்கள் சமகாலத்தில் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடியிருந்தோம், அவற்றில் சிலவற்றுக்கு அவ்விடத்திலேயே செயலாளர்கள் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் பணித்திருந்தார்.
மேற்படி சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்புக்கள் செய்வது, மயிலத்தானமடு மாதவனை பிரதேசத்தில் தொடர்ந்தும் அத்துமீறி அபகரிக்கப்பட்டுவரும் மேய்ச்சல் தரை காணிகள் தொடர்பாகவும், கிழக்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைகள், சட்ட விரோதமான மண் அகழ்வு, காணி அபகரிப்புகள், காட்டு யானைகளின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டதுடன் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பிலும் எம்மால் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக மட்டக்களப்பு புதுநகரில் விமானப் படையினரால் வசப்படுத்தப்பட்டுள்ள வலையிறவு பிரதான வீதியினை மீளவும் பொதுமக்களின் பாவனைக்கு விட வேண்டும், தாண்டியடி பிரதேசத்தில் பொலிஸாரினால் அபகரிக்கப்பட்டுள்ள மயான காணியினை விடுவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் வலயங்களுக்கு மாத்திரம் பாரபட்சமான முறையில் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை தொடர்பிலும் அதனால் கிழக்கில் உள்ள தமிழ் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் அதிர்ப்தியடைந்துள்ளமை பற்றியும் எம்மால் ஆளுநருக்கு எடுதுரைக்கப்பட்டதுடன், அவ் விடயம் தொடர்பில் பாரபட்சமின்றி உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாருக்கு ஆளுநர் அவ்விடத்திலேயே அறிவுத்தல்களை வழங்கி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.