உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்காக செயற்படுத்தப்படும் யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன வழங்கிய தீர்ப்பினை மீளப்பெற வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் இதற்கான எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் சபையில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்காக செயற்படுத்தப்படும் யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்று கடந்த ஒன்பதாம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற நடைமுறையைப் பின்பற்றி நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு எதிராக எந்தவொரு வகையிலும் உத்தரவு அல்லது தீர்ப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டியிருந்தார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டமானது அமைச்சரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்ற அரச நிதி தொடர்பான செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 2023 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் நினைவுபடுத்தியிருந்தார்.