நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்றை நிறைவேற்றிவிட்டு பின்னர் அதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறுவது முற்றிலும் தவறான விடயமாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த ஒன்பதாம் திகதி நீங்கள் வழங்கிய தீர்மானம் பிழையானது. நாங்கள் நீதிமன்றத்தினூடாக தான் நாடாளுமன்றத்திற்கு வருகின்றோம்.
எந்தவொரு சட்டமூலத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் பின்னர் அதனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது.
நாங்கள் முன்வைத்தது ஒரு யோசனை அது சட்டமூலம் அல்ல.
உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்காக செயற்படுத்தப்படும் யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்று கடந்த ஒன்பதாம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற நடைமுறையைப் பின்பற்றி நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு எதிராக எந்தவொரு வகையிலும் உத்தரவு அல்லது தீர்ப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்றை நிறைவேற்றிவிட்டு பின்னர் அதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறுவது முற்றிலும் தவறானது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.