நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதிகாரத்தை பிரிப்பதானது பொருத்தமானதொரு விடயமாக அமையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடு இன்னமும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து முழுமையாக மீண்டுவரவில்லை.
இவ்வாறானதொரு நிலையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை பொருத்தமானதொரு செயற்பாடாக நாம் கருதவில்லை.
நாடு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை சில சர்வதேச நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பயன்படுத்தி, தங்களின் நிகழ்ச்சிநிரலை இங்கு செயற்படுத்த முற்படுகின்றன.
எனவே, அதிகாரத்தைப் பரவலாக்கல் எனும் விடயம் தற்போதைக்கு தேவையான ஒன்றல்ல என்பதை ஜனாதிபதியிடம் நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்போது நாட்டை பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும். இதனைத்தான் மக்களும் ஜனாதிபதியிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்;கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டை பிரிக்கும் அல்லது நாட்டின் ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதற்கும் ஒத்துழைப்பினை வழங்காது.
இவ்வாறான மனநிலையுடன் உள்ள ஒருவருக்கு உதவவும் நாம் தயாரில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.