நல்லிணக்கத்தை விரும்புபவராக ஜனாதிபதி இருந்தால் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
மேர்வின் சில்வாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக கண்டனம் வெளியிட்டு இன்று ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ள அருட்தந்தை மா.சத்திவேல், அவரது கருத்து பௌத்தத்தின் பெயரால் புத்தனின் போதனைகளை அவமதிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள மேர்வின் சில்வா, நாடு வீழ்ச்சியில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அடிமட்ட சிங்கள பௌத்த மக்களை தூண்டி விடும் இழிவான அரசியலை மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய பேரினவாத அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இவர்கள் தேவையாக உள்ளதாலேயே இவர்கள் சுதந்திரமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர் என்றும் இந்நிலை நீங்காத வரை நாட்டுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்றும் மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் தீர்வு என 13 ஆவது திருத்தத்தை வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டும் தற்போதைய ஜனாதிபதியின் நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடாது சுய உரிமைக் காக்கும் அரசியலுக்காக தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.