சில வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு, தொழில்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களால் பாராட்டப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்திற்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது பல துறைகளை வலுப்படுத்தும் என இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையின் மொத்த இறக்குமதிச் செலவில் 4.9 சதவீதம் மட்டுமே உள்ள தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதித் தடையை நீக்குவது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சரக பெரேரா தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி வரி மூலம் அரசாங்கம் சுமார் 130 பில்லியன் பாரிய வருமானத்தை ஈட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மேலதிக இறக்குமதி வரியை விதித்த பின்னர் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம், இது கணிசமான வருமானத்தை அரசாங்கத்திற்கு ஈட்ட உதவும் என்றும் சரக பெரேரா தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், முழுத் தொழில்துறையும் முதல் ஆண்டில் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள், ட்ரக்குகள் மற்றும் பேருந்துகளின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி நிதியமைச்சு நேற்று வர்த்தமானியை வெளியிட்டது.
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறக்குமதி தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தினாலும், வாகனங்கள் மீதான சில கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.