தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்ப்படுத்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ப்பாக ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வரவேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த முன்னெடுப்புக்கள் அர்த்தபூர்வமானவையாக அமைய வேண்டுமாயின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தொல்லியல் ஆய்வு செயற்பாடுகள் அந்தந்த மாவட்டத்தினை சேர்ந்த வரலாற்றுத்துறை நிபுணர்களின் பங்குபற்றுதல் மற்றும் கலந்தாலோசனைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, தொல்லியல் திணைக்களத்தின் கொழும்பு அலுவலகத்தில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் சிலரின் விருப்பு வெறுப்பு சார்ந்த முன்னெடுப்புக்களாக அமைவதை அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைளை நிறைவேற்ற முடியும் என்ற ஈ.பி.டி.பி.கட்சியின் நீண்ட கால நிலைப்பாடு குறித்த ஆவணத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு சாத்தியமான 3 கட்டப் பொறிமுறைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.