வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியதும், சிறந்த சுற்றுலா வசதிகளை கொண்ட இடமாகவும் இலங்கையை மாற்றுவதற்கான குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தற்போது முன்னெடுக்கும் திட்டங்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்பு குறித்து அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் புதிய நிலவரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் வகையில், தற்போது பயன்படுத்தப்படாத பாரம்பரிய தோற்றம் கொண்ட கட்டிடங்கள் மற்றும் பங்களாக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிக்குமாறும், தற்போது வரையில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு உட்படாத பகுதிகளை கண்டறியுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிய முதலீடுகளுக்கு உகந்த சூழலை நாட்டிற்குள் உருவாக்குவதற்கான முதலீட்டு உட்கட்டமைப்பு கூட்டுத்தாபனம் ஒன்று நிறுவப்பட்டு, கொள்கை ரீதியிலான் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சபையொன்றை ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் முதலீட்டு வலயங்கள், சுற்றுலா வலயங்கள், தொழில்நுட்ப வலயங்கள் என்பவற்றை அதன் கீழ் நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.