உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்களுடனும், பிரதம செயலாளர்களுடனும்; ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சில சமயங்களில் உள்ளூராட்சி மன்றம், மாகாண சபை, மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளாலும் ஒரே மாதிரியான சேவைகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, வடிகால் வெட்டுதல், மின் கம்பம் நடல், வீதிகள் அமைத்தல் போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.இவ்வாறு நடப்பதால் பெருமளவு பணம் வீணாகிறது.
அப்படியானால், இந்த மூன்று பொறிமுறைகளின் செயல்பாட்டை மையமாகக் கொண்டு ஒரு புதிய பொறிமுறையை அமைக்க வேண்டும். மாகாண பிரதம செயலாளர்களுடன் கலந்தாலோசித்து ஒரு மாதத்திற்கு முன்னர் அதற்கான புதிய பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.
மாகாண சபைகள் இயங்காததாலும், மாகாண சபைகளில் அமைச்சர்கள் இல்லாததாலும் இன்று மாகாண சபை முறைமையில் மாகாண ஆளுநர்களாகிய உங்களுக்கே முழுமையான ஆட்சி அதிகாரம் உள்ளது.
மாகாண பிரதம செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, ஒரு மாதத்திற்குள் அதற்கான புதிய கட்டமைப்பைத் தயாரிக்குமாறு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.
குறிப்பாக கீழ்மட்ட சேவைகள் மாகாண சபைகள் ஊடாகவே மேற்கொள்ளப்படுகிறன. மாவட்ட அளவிலான சேவைகள் மத்திய அரசின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த சேவைகளை வழங்கும் போது அதிகாரப்போட்டியின்றி கூட்டாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றம் அடுத்த வருட இறுதி வரை செயற்படும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபை நிர்வாக செயற்பாடுகளில் இணைவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆளுநருடன் இணைந்து செயல்பட விசேட ஆலோசனைக் குழுவை நியமிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.