நுவரெலியா – பம்பரக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற போது, நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த நான்கு பேரும் சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து 16 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த குறித்த சிறுவன், நுவரெலியா, பம்பரக்கலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நுவரெலிய பொது வைத்தியசாலையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பலர் உயிரிழந்துள்ள நிலையில், குளவிக்கூடுகள் உள்ள இடங்களை இணங்கண்டு அவற்றை உரிய முறையில் அகற்றுமாறு அம்மக்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.
எனினும், இதற்கான தீர்வொன்று இதுவரை வழங்கப்படாத நிலையிலேயே, தற்போது மேலுமொரு உயிர் இழக்கப்பட்டுள்ளது.
எனவே, இனியாவது அதிகாரிகள் இதற்கான உரிய நடவடிக்கையை எடுத்து தங்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அம்மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.