பிபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்து இறுதி போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் முதல் தடவையாக கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் காற்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிட்னியில் உள்ள ஒலிம்பிக் பூங்காவில் மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இடம்பெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்போடும் முனைப்புடன் விளையாட, 29 ஆவது நிமிடத்தில் ஓல்கா கார்மோனா ஒரு கோலை புகுத்த ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது.
இதனை சமன் செய்வதற்கான சிறந்த வாய்ப்பு, இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்திற்கு கிடைத்த போதும் அது கைநழுவிப்போனது.
இரண்டாவது பாதியை அதே தீவிரத்துடன் தொடங்கிய ஸ்பெயினுக்கு 67 நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, இருப்பினும் ஜென்னி ஹெர்மோசோ இங்கிலாந்து கோல் கேப்பரிடம் பந்தை பிடிகொடுக்க இரண்டாவது கோல் வாய்ப்பு நழுவிப்போனது.
இதனை தொடர்ந்து 13 நிமிட மேலாதிக நேரம் வழங்கப்பட்ட போதும் இங்கிலாந்து அணியால் கோல் எதையும் புகுத்த முடியாதமையால் ஸ்பெயின் அணி முதல் தடவையாக மகுடம்சூடியது.