உலகளவில் பலகோடிமக்களின் எதிர்பார்ப்பும், வேண்டுதல்களும் தற்போது இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் மீதே திரும்பியுள்ளன.
குறிப்பாக கடந்த 11 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட ரஷ்யாவின் ‘லூனா-25’ விண்கலம் அண்மையில் நிலவின் மேற்பரப்பில் மோதி தோல்வியடைந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
காரணம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்திருந்தாலும், அங்கு முதன் முதலாக தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தது இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலமே.
அதன் தொடா்ச்சியாகவே கடந்த 2019 ஆம் ஆண்டு உலகின் வேறு எந்த நாடுமே கால் பதிக்காத நிலவின் தென்துருவத்தை தெரிவு செய்து அங்கு தனது ஆய்வினை நடத்த சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது இஸ்ரோ.
எனினும் எதிா்பாராத விதமாக லேண்டா் வேகமாகத் தரையிறங்கியதால் அதன் தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டு அம்முயற்சி தேல்வியைத் தழுவியது.
எவ்வாறு இருப்பினும் தனது முயற்சிகளில் இருந்து சற்றும் தளராத இஸ்ரோ, பல்வேறு மாற்றங்களுடன் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் ‘சந்திரயான்-3‘ என்ற விண்கலத்தை வடிவமைத்து கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி எல்விஎம்-3 ரொக்கேட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.
இந்நிலையில் 40 நாட்கள் பயணத்திற்குப் பின்னர் சந்திரயான்-3 இல் இருந்து கடந்த 14 ஆம் திகதி பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் இன்று புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் சொஃப்ட் லேண்டிங் முறையில் அதாவது மெதுவாக நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதன்படி நிலவுக்கு அருகே 25 கிலோ மீற்றர் உயரத்துக்கு லேண்டா் வந்ததும் எதிா்விசை நடைமுறையைப் பயன்படுத்தி அதன் வேகம் குறைக்கப்படும் எனவும், இதன்மூலம் நிலவின் தரைப் பகுதிக்கும், லேண்டருக்குமான உயரமும் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ”நிலவின் தரையில் இருந்து 150 மீற்றர் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டதும் சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்படும் எனவும் அதைத் தொடா்ந்து, அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தெரிவு செய்யப்படும் எனவும் அதன்பின் லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே மிக மெதுவாக லேண்டா் தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 3 மணி நேரத்துக்கு பின்னா் அதில் உள்ள பிரக்யான் என்ற ரோவா் சாதனம் வெளியேறி 14 நாட்கள் அப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் இதற்காக லேண்டரில் 4 ஆய்வுக் கருவிகளும், ரோவரில் 2 ஆய்வுக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் நிலவில் தரையிறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அதனடிப்படையில் சாதகமான சூழல் இல்லாவிட்டால் வரும் 27ஆம் திகதி தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரோவின் அகமதாபாத் மைய இயக்குநர் தேசாய் தெரிவித்துள்ளமை இந்திய மக்களிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இத்திட்டம் வெற்றிபெறவேண்டுமென கோடிக்கணக்கான இந்திய மக்கள் இன,மத மொழி வேறுபாடுகளின்றி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே பல்வேறு தடைகளுக்குப் பின்னர் இந்தியா படைக்கவுள்ள இச்சாதனை முயற்சி வெற்றிபெறவேண்டுமென நாமும் வாழ்த்துவோம்.
(இளங்கோ பாரதி)