தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை `மயிலத்தமடு சம்பவம்`
வெளிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இந்த நாட்டில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவுள்ள ஊடகத்துறை இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியதையே குறித்த சம்பவம் காட்டுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை ’மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் மகாவலி அதிகாரசபையினரே பின்புலமாக செயற்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 22 ஆம் திகதி மாதவளை மயிலத்தமடு பகுதியில் உள்ள பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பண்ணையாளர்களின் அழைப்பின் பெயரில் மயிலத்தமடுவிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் பல்சமய தலைவர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.