தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னிலை சோஷலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினர்களான சரித ஹேரத், வாசுதேவ நாணயக்கார மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 24 பேருக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அநியாய வரி விதிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.