இந்தியாவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில் போராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை உள்ளாரா எனும் சந்தேகம் எழுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வடக்கில் மன்னாரிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சநிலை தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்திருந்தாலும் ஒவ்வொரு தேர்தல்கள் வரும் காலத்திலும் இனவாதத்தினை தூண்டிவிட்டு அரசியல்செய்வது இந்த நாட்டில் வழமையாகிவிட்டது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தமக்கு சாதமாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை பூதாகரமாக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார்கள்.
எதிர்வரும் ஆண்டும் ஓரு தேர்தல் ஆண்டாகயிருக்கப்போகின்றது. இதனை மையமாகக்கொண்டு ஒரு சில இனவாதிகள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களை சுற்றிவளைக்கவேண்டும் என்றும்,வடகிழக்கில் பௌத்த மதத்திற்கு எதிராக தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என்று இனவாதத்தினை வெளிக்கிளப்பி கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு முன்பாகவும் இரண்டு தினங்களாக ஆர்ப்பாட்டங்களை செய்திருந்தார்கள். இதனை நாங்கள் வன்மையாக கண்டிகின்றோம்.
வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பில் சிங்களவர்களின் தலைநகரத்தில் தமிழர்களுக்கு என்னவேலையென்று நாடாளுமன்ற உதயகம்பன்பில கூறுகின்றார்.
வடகிழக்கில் நீங்கள் வந்து அடாத்தாக கூடியேறுகின்றீர்கள்,ஆனால் கொழும்பிலும் தெற்கிலும் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை என்பதை கம்பன்பில போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
நீங்களே கொழும்பு சிங்கள தலை நகரம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்றால் நாடாளுமன்றத்தில் நீங்களே வடக்கு கிழக்கினை பிரித்து எங்களை தனிநாடாக பிரகடனப்படுத்திவிட்டால் எல்லோருக்கும் அதுவசதியாக இருக்கும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.