நாட்டின் பல பகுதிகளிலும் மழைவீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில் மூன்று மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முதலாம் நிலை எச்சரிக்கைகள் இன்று இரவு 8 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலகப் பகுதிகளிலும், கேகாலை மாவட்டத்தில் சில பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளும் இரத்தினபுரியின் எஹலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலகப் பகுதிகளும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.