சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் எதிர்வரும் 6,7,8, ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து கலந்துரையாடும், கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது, குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்வரும் 6,7, 8 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை 8 ஆம் திகதி பிற்பகல் மேற்கொள்ளவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களிக்கவுள்ளதாக நாடாளுமன்றில் பெரும்பான்மை வகிக்கும் மொட்டுக் கட்சி அறிவித்துள்ளது.
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதாரப் பிரச்சினைகள் என்பன சுகாதார அமைச்சருக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள சதித்திட்டமாகும் என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி, சுகாதாரத்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.