ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டுவர கத்தோலிக்க திருச்சபை உட்பட கத்தோலிக்க சமூகம் ஆதரவை வழங்க வேண்டும் என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கவலை வெளியிட்டிருந்தார்.
ஆகவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் இணைந்து மேலதிக விசாரணைகளுக்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் பேசிய பேராயர், பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்கியதாகப் பெருமை பேசுவதைத் தவிர, பொது பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் எதுவும் செய்வதில்லை என குற்றம் சாட்டினார்.
பொய்களை கூறாமல், பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுங்கள் என்றும் செய்ய வேண்டிய விடயங்களை செய்யாமல், பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என தம்மை குற்றம் சாட்டுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியிருந்தார்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணையே தங்களுக்குத் தேவை என வலியுறுத்திய பேராயர், அது சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பலவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை எனவும், அதன் சில பரிந்துரைகளை அரசாங்கம் மறைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.