சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு கடந்த 9ஆம் 10ஆம் திகதிகளில் டெல்லியில் நடைபெற்றது.
இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
முதன்நாளில் ஜி-20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மிக முக்கியமாக இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் 21ஆவது உறுப்பு நாடாக ஜி-20 கூட்டமைப்பில் இணைந்தமை மைல்கல்லாகும்.
ஜி-20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் உரையாற்றி பிரதமர் மோடி, எதனால் கலப்பதை 20 சதவீதம் வரை அதிகரிக்க, உலக அளவில் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் முன்மொழிவு என்றும், இதற்காக உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது தற்போதைய காலத்தின் தேவை என்று பிரதமர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
‘ஜி – 20’ மாநாட்டில், 37 பக்கங்களில், 83 பத்திகள் உள்ள புதுடில்லி பிரகடனம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘இன்றைய யுகம், போருக்கானது அல்ல’ என்பதை வலியுறுத்தியுள்ள இந்த பிரகடனம், சர்வதேச விதிகளை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும்; நாடுகளின் எல்லைகள் மற்றும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்; உக்ரைனில் விரிவான, ஸ்திரமான அமைதி திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் போர் தொடர்பாக, பிரகடனத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக, இந்தோனேஷியாவின் பாலியில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதை நினைவு கூர்கிறோம். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா., பொது சபையில், இந்த விவகாரம் தொடர்பான தீர்மானங்களில் அந்தந்த நாடுகள் எடுத்த நிலைப்பாடுகளை மதிப்போம்.இந்த விவகாரத்தில், ஐ.நா.,வின் கொள்கைகளை அனைத்து நாடுகளும் முழுமையாக பின்பற்றுவோம்.
ஜி-20 மாநாட்டில், பெண்கள் முன்னேற்றத்திற்காக புதிய செயற்குழு அமைக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவும், அதன்படி, பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதலை 2030-க்குள் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த வேண்டும் என்றும், அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது என ஜி-20 மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளதாக அறிவித்த வடகொரியாவுக்கு ஜி-20 நாடுகள் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காகவும் உறுப்பு நாடுகள் சார்பில் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டன.
சர்வதேச நிதி அமைப்புகளை சீரமைக்க ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜி20 மாநாடு தீர்மானம் தொடர்பாக இந்திய சார்பில் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் என்பதே ஜி 20 மாநாட்டின் தகவல் என்றார்.
இந்தியா தலைமையின் கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி 20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது திருப்தியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜி 20 மாநாட்டின் இரண்டாவது நாளில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சாரல் மழைக்கு நடுவே டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு ஜி-20 நாடுகளின் தலைவர்கள் வருகை தந்தனர்.
அவர்களை பிரதமர் நரேநதிர மோடி சால்வை அணிவித்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஒரே நேரத்தில் மலர் வளையம் வைத்து மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.
இதனைவிடவும், இந்த மாநாடு மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. சுமார் 60 நகரங்களில் நடைபெற்ற 200-க்கும்மேற்பட்ட மாநாடுகளில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் இந்தியா உறுதியாக உள்ளமையை மாநாடு வெளிப்படுத்தியுள்ளது.
நீடித்த மற்றும் கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதற்கு அமைவாக குறித்த பிரகடனம் மீது ஒருமித்த கருத்துடன் ஏற்கப்பட்ட சாதனையுடன் மாநாடு நிறைவடைந்துள்ளமை விசேடமானதாகும்.