ரயில்வே ஊழியர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளையடுத்து கைவிடப்பட்டுள்ளது.
ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படாததால், இன்று காலை ரயில்வே தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அதங்கிணங்க, இன்று காலை 10.40 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும் டிக்கிரி மெனிகே புகையிரதம் உட்பட 10 மணிக்கு பின்னர் இயக்கப்படவிருந்த ஆறு பிரதான புகையிரத பயணங்களை புகையிரத திணைக்களம் இரத்துச் செய்ய வேண்டியிருந்தது.
காலை மற்றும் மதியம் இயக்கப்பட்ட ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டதால், ரயில்வே பொது மேலாளருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், எதிர்வரும் 25 ஆம் திகதி உதவித்தொகை வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், இன்று மதியம் 2.30 மணியளவில் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், குறித்த போராட்டம் காரணமாக மாலை நேர ரயில் இயக்கத்தில் பாரிய பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.