மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
18 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் தற்காலிகமாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் ஆலயம் புனரமைக்கப்பட்டது.
கடந்த 06 ஆம் திகதி கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு சமயக் கிரியைகள் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று காலை தொடக்கம் மாலை வரையில் நடைபெற்ற இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
கும்பாபிசேக கிரியைகள் யாவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் மற்றும் தாந்தாமலை முருகன் ஆலயங்களின் பிரதமகுரு சிவ ஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை புண்ணியாகவாசனம், யாகபூஜை, உபசார ஹோமம், விசேட தீபாராதனை உட்பட பல்வேறு கிரியைகள் நடைபெற்று பிரதான கும்பங்கள் உட்பட கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு பக்தர்களின் அரோகரா கோசத்துடன், மேளதாள முழங்க தூபி அபிசேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கோபுர பூஜை நடைபெற்றதுடன் பக்தர்களின் தசதர்சன வழிபாடுகளும் வெகு விமர்சையாக நடைபெற்றன.