“சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக சர்வதேச விசாரணை இடம்பெற்றால், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வோம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “தேர்தலில் வெற்றிபெறத் தான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இவ்வாறான சூழ்ச்சியில் ஈடுபட்டதாக ஒருவர் கூறுவாறாயின், எம்மைப் பொறுத்தவரை அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றே கருதப்படும்.
ஏனெனில், 2018 இல் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது நாம் பாரிய வெற்றியடைந்தோம் என்பதை அனைவரும் அறிவார்கள். உள்நாட்டில் இதுதொடர்பாக விசாரணை செய்ய தகுதியான நபர்கள் உள்ளார்கள். இந்த நிலையில், அரசாங்கமானது சர்வதேச ரீதியாக தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நினைத்தால், நாம் அதற்கு இணக்கம்தான் வெளியிடுவோம்.
இது பொதுஜன பெரமுன மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என்பதை நாம் நிரூபிப்போம். எமது கட்சியின் வளர்ச்சியைக் கண்டு சர்வதேச ரீதியாக சிலர் அஞ்சுவதால்தான் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.