ஐக்கிய அமெரிக்காவின் அழகு மிகு நகரான நியுயோர்க்கில், வானளவு உயர்ந்த அந்த இரட்டைக் கோபுரம், பரபரப்புடன் உலாவரும் பணியாளர்களுக்கு மத்தியில் கம்பீரமாக அன்று காட்சியளித்துக் கொண்டிருந்தது.
வேலைக்குச் செல்லும் பணியாளர்கள், வீதிகளை கடக்கும் பொது மக்கள், தேனீர்க் கடை ஊழியர்கள், தெருவோர இசைக் கலைஞர்கள் என அந்தப் பகுதியும் வழமைப் போன்று பரபரப்பாகவே காணப்பட்டது.
ஆனால், இவர்கள் யாருக்கும் அன்று தெரிந்திருக்கவில்லை, வரலாறு காணா ஒரு பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்கா இன்னும் சற்று நேரத்தில் முகம் கொடுக்கப் போகிறது என்று…
ஆம், அமெரிக்காவின் உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரம், 22 வருடங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு தினத்தில்தான் தீவிரவாதிகளால் தாக்கியழிக்கப்பட்டது.
அன்று காலை 7.56 மணியிருக்கும்…
11 விமானப் பணியாளர்களுடனும் 76 பயணிகளுடனும் பயணித்த போயிங் 767 எனும் விமானம், 8.46 மணிக்கு உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரம்மீது மோதியது.
ஐந்து தீவிரவாதிகளால் குறித்த விமானம் கடத்தப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலில், கட்டடத்தின் 93 முதல் 99 ஆவது வரையான மாடிகள் நொறுங்கியதுடன், விமானத்தில் பயணித்த 92 பேரும் உயிரிழந்தனர்.
தாக்குதல் இடம்பெற்ற பதற்றத்தில், நொறுங்கி விழுந்த கட்டடத்தின் புழுதிக் கூட்டத்தையும் ஊடறுத்து, பொது மக்கள் சிதறி ஓடிய சிறுது நேரத்திலேயே, இரண்டாவது தாக்குதலும் நடத்தப்பட்டது.
9 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்கள் தவிர 51 பயணிகளுடன், காலை 8:14 மணிக்கு லோகன் விமான நிலையத்திலிருந்து, லாஸ் ஏஞ்சலஸ்க்கு புறப்பட்ட போயிங் 222 எனும் விமானத்தைக் கொண்டு, காலை 9:03 மணிக்கு உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரமும் தாக்கப்பட்டது.
உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இந்த இரு கோபுரங்களும் பயங்கரவாதத் தாக்குதலினால் பற்றி எரிந்தன.
தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து, நொறுங்கி விழுந்ததோடு, வடக்கு கோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கிச் சரிந்தது.
இந்தத் தாக்குதலானது அமெரிக்கா மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகமும் இதற்கு முன்னர் கண்டிராத ஒன்றாகவே அதுவரை கருதப்பட்டது.
இதில், விமானங்களில் பயணித்தவர்கள் உள்ளிட்ட 2763 பேர், கண் இமைக்கும் நொடியிலேயே காலாணினால் காவு வாங்கப்பட்டனர்.
ஆனால், இதனுடன் இந்தத் தாக்குதல்களை அந்தத் தீவிரவாதிகள் நிறுத்திக் கொள்ளவில்லை.
9.37 மணிக்கு, அடுத்தத் தாக்குதல் பென்டகன் மீது நடத்தினார்கள்.
6 விமானப் பணியாளர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 53 பயணிகளுடன், காலை 8:20 மணிக்கு வெர்ஜினியாவிலிருந்து லாஸ் ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, 7 விமானப் பணியாளர்கள் மற்றும் நான்கு கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 33 பயணிகளுடன், காலை 8:42 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்ற விமானத்தைக் கொண்டு, காலை 10:03 மணிக்கு, பென்னிசிலாவனியா மாகாணத்திலுள்ள ஷான்க்ஸின் நிலப்பகுதியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்வாறு நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களில், மொத்தமாக 33 விமானப் பணியாளர்கள், 213 பயணிகள் உள்ளிட்ட 2996 பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களின் 300 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல்கள் நடந்த சில மணி நேரத்திற்குள், தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் பெயர், விபரங்களை எப்.பி.ஐ. வெளியிட்டது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு விமானங்களையும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 15 தீவிரவாதிகளும், ஐக்கிய அரவு இராஜ்ஜியத்திலிருந்து இரண்டு தீவிரவாதிகளும், எகிப்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியும், லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியும் என மொத்தமா 19 தீவிரவாதிகள் இணைந்து கடத்தியுள்ளனர் என்று அமெரிக்கா அறிவித்தது.
மேலும், அல் கொய்தா எனும் தீவிரவாத அமைப்பே, இந்தத் தாக்குதல்களை நடத்தியது என்றும் அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனே இந்தத் தாக்குதல்களின் மூளையாக நின்று செயற்பட்டவர் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனமும் ஜெர்மனி உளவுத்துறையும் இணைந்து உத்தியோகபூர்வமாக அறிவித்தன.
அதுவரை அல் கொய்தா எனும் தீவிரவாத அமைப்பு தொடர்பாகவோ அவ்வமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் தொடர்பாகவோ உலகமும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை என்றே கூறவேண்டும்.
இவ்வாறான இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்று 22 வருடங்கள் கடந்தோடி விட்டாலும், இதன் வடுச் சுவடுகளை, இன்னமும் மக்கள் அவர்களது மனங்களில் சுமந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதல்கள் போன்று, தெற்காசியாவின் மிகவும் மோசமான பயங்கரவாதத் தாக்குதலான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலங்கையும் 4 வருடங்களுக்கு முன்னர் முகம் கொடுத்திருந்தது.
இவ்வாறு ஏதோ ஒரு வகையில், ஒட்டுமொத்த உலகமும் பயங்கரவாதத்தால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.
இவற்றுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் கோருவதோ, நீடித்த அமைதியையும் நிலையான சமாதானத்தையும்தான்.
இதனை உலகில் வாழும் ஒவ்வொருவரும் உணரும் வரையில், எங்கோ ஒரு மூலையில் இருந்து, மக்கள் கூட்டத்தின் மரண ஓலம் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்…!