வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புடினை சந்தித்துப் கலந்துரையாட ரஷியா புறப்பட்ட நிலையில், இன்று ரஷியாவை வந்தடைந்துள்ளார்.
கிம் ஜாங்-உன் பயணப்படும் ரயிலில் ரஷியாவுக்கு அளிக்கவிருக்கும் ஆயுதங்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், இந்த கவச ரயில் ரஷ்யாவை நோக்கி புறப்பட்டிருப்பது, ரஷியா – வடகொரியா இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிம், பியோங்யாங்கிலிருந்து ரயில் மூலம் புறப்பட்டிருப்பதாகவும், அந்த ரயிலில் மூத்த அதிகாரிகள், ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள், ராணுவ வீரர்கள் இருப்பதாகவும் செவ்வாயன்று இரு தலைவர்களின் சந்திப்பு நிகழும் என்றும் வடகொரியாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தநிலையில் வடகொரியாவின் வடகிழக்கு எல்லை வாயிலாக ரயிலில் ஜனாதிபதி கிம்ஜாங் உன் பயணம் செய்து ரஷியாவுக்கு வந்துள்ளார்.
ரயிலில் ரஷியாவுக்கு வழங்க வேண்டிய ஆயுதங்களும் இடம்பெறும் என தென்கொரிய ஊடகம் குறிப்பிட்டிருந்தது.
ரஷியாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக் பகுதியில் இன்று இந்த சந்திப்பு நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதற்கான பலனை வடகொரியா சந்திக்கும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுளிவியன் எச்சரித்திருந்தார்.