பிரித்தானியாவின் ஜனநாயகத்தில் சீனா தலையிடுவதை நான் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற ஆய்வாளர்(Parliamentary researcher) ஒருவர் சீனாவுக்காக பிரித்தானியாவை உளவு பார்த்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் குறித்த உளவாளிக்கு ஆதரவளித்த மற்றுமொரு நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த உளவாளி, பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பினைப் பேணி வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த போதே அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பிரித்தானியாவை உளவு பார்க்கும் சீனாவின் முயற்சியை நான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன். இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இருப்பினும் பிரித்தானியாவின் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா ”இது தங்கள் நாட்டின் மீது சுமத்தப்படும் அவதூறு எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.