காலத்திற்கு ஏற்றவகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்டங்களை மாற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு வசதிகளையும் திருப்தியையும் வழங்குவதற்காகவே எமது உள்ளூராட்சி மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. வரி கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினாலும் அவர்கள் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்தே வரியினை செலுத்துகிறார்கள்.
இதில் சேவைகள், பாதுகாப்பு, பிள்ளைகளின் முன்னேற்றம், நல்ல சூழல் போன்ற பல விடயங்கள் உள்ளன. மாகாண சபைகள் இல்லாத நிலையில் ஆளுநரிடம் பல அதிகாரங்கள் குவிந்துள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அமைச்சு தலையிடவோ அல்லது ஆலோசனை வழங்கவோ முடியும்.
ஒன்பது மாகாண சபைகள் உள்ளன. அதிகாரிகள் என்ற வகையில், இந்த அனைத்து மாகாண சபைகளுடனும் தொடர்ந்து உரையாடல் இருக்க வேண்டும். குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சேவை செய்யுங்கள்.
எங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. உதவியின் ஒரு பகுதி, குறைந்த உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றே அவை வழங்கப்படுகின்றன.
இது தொடர்பில் எம்மிடம் ஒரு வேலைத்திட்டம் இருக்க வேண்டும். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித் துறையில் பல்வேறு சட்ட திட்டங்கள் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்” என தெரிவித்தார்.