சீன ஆய்வுக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இவ்விடயங்கள் இராஜதந்திர ரீதியிலேயே கையாளப்படும் என குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சீன ஆய்வுக்கப்பலான ஷி யான் 6 இன் வருகையுடன் தொடர்புடைய விவகாரங்களில் வெளிவிவகார அமைச்சு நேரடியாகத் தொடர்புபடவில்லை, அக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
அதேவேளை, சீன கப்பலின் வருகை தொடர்பில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையே நிலவும் முறுகல் நிலையை இராஜதந்திர ரீதியிலேல் கையாளுவோம்.
அதுமாத்திரமன்றி இந்த சவால்களை அடையாம் காண்பதற்கும், பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்து சமுத்திர வலய நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் பங்களிப்புச் செய்யும்.
எவ்வாறெனினும் நாட்டின் உள்ளக நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே செயற்படுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.