திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம், இது குறித்து கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் ” தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் வடகிழக்குத் தமிழர் தாயகமெங்கும் செப்டெம்பர் 15 முதல் 26 ஆம் திகதி வரை தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுத்துவரப்படும் நிலையில், தமிழ் அரசியல் கட்சியொன்றினால் நினைவேந்தலையொட்டி முன்னெடுக்கப்பட்ட ஊர்திப்பவனியானது திருகோணமலையில் சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் தாக்கப்பட்டுள்ளமை குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மரணித்த எதிரியைக் கூட உரிய மரியதைகளோடு நடத்தப்பட வேண்டும் என்னும் குறைந்தபட்ச மனித மாண்பு கூட இன்றி அண்ணன் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியானது தாக்கப்பட்டமை நாகரீகமடைந்த இந்த சமுதாயத்தின் வெட்கக்குறியீடு!
அதேவேளை, இச் சம்பவமானது, வடகிழக்கு மாகாணங்களில் இன்னமும் தமிழ் மக்களுக்கு குறைந்த பட்ச நினைவுகூறும் உரிமையும் மறுக்கப்படுகின்றது என்பதற்கு நேரடி நிகழ்கால எடுத்துக்காட்டாகும்.
அகிம்சையைப் பற்றிப் போதித்து அகிம்சாவாதிகளிற்கும் சனநாயகவாதிகளிற்கும் முன்னுதாரணமாக விளங்கும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் இந்த நினைவேந்தல் ஊர்தியை தாக்கும் சிங்கள அடிப்படைவாதக் கும்பல்களைப் பார்த்தாவது நம் வளரிளம் தலைமுறையும் உலகச் சமூகமும் தமிழ் மக்களின் நிலை பற்றி சிந்திக்க வேண்டும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.