“தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கண்டன தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது” தமிழர்களின் நினைவேந்தல் உரிமையானது தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே இத்தாக்குதல் உள்ளது. தமிழரின் நினைவுகளையும் வரலாற்றையும் திட்டமிட்டு அகற்றும் நோக்கிலான நினைவழிப்புச் செயலாகவே (Memoricide) இதனைக் கருத முடியும்.
கடந்த ஓகஸ்ட் மாதம் சரத் வீரசேகர எம்.பி, தமிழ் நீதிபதி ஒருவரை ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்று முத்திரை குத்தினார். அத்துடன் “இலங்கை ஒரு சிங்கள-பௌத்த தேசம் என்பதை நீதிபதி புரிந்து கொள்ள வேண்டும் அத்துடன் சில தமிழ் நீதிபதிகள் வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் பாரம்பரியத்தின் நலனுக்கு எதிராக செயற்படுகின்றனர்” என்று கூறினார்.
தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த ஸ்தலங்களை குறிவைப்பதாக முறையிட்ட கல்கமுவ சாந்தபோதி தேரர், குருந்தூர்மலையே தமிழர்களின் இறுதி வழிபாடாக இருக்கும் என எச்சரித்துள்ளார். பௌத்த விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைக்கும் தமிழர்கள் தலை துண்டிக்கப்படுவார்கள் எனக் கூறி, வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார் மேர்வின் சில்வா. இவை போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் கட்டுப்படுத்தப்படாமல் போகின்றன. அதன் வளர்ச்சியே திருகோணமலையில் பேரினவாதக் கும்பல் வன்முறையில் ஈடுபடுவதில் வந்து நிற்கின்றது.
அரசாங்கம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க முயலும் ஒரு கட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்தத் தாக்குதல், எந்தவொரு உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக் குழுவின் வெற்றிக்கு இன்றியமையாத தமிழர்கள் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ளும் மன நிலை பெரும்பான்மை சமூகத்தினரிடையே இல்லை என்பதை மீள உறுதி செய்கின்றது.
எனவே இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும், தீவில் உள்ள நீதி அமைப்பு தமிழர்களுக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குற்றவாளிகள் நீதி விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.