”13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் யாழிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையோடு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ள நிலையில் 13 ஆவது திருத்தத்தை அமுல் படுத்தி மாகாண சபைகளை உருவாக்கி அதிகாரங்களை வழங்க வேண்டியது முன்னரை விடவும் இப்போது அவசியம். இவ்விடயத்தில் இந்தியா கரிசனை கொள்ள வேண்டும்.
ஏனெனில் தமிழ் மக்களினுடைய சகல அதிகாரங்களும் நாளுக்கு நாள் குறைந்து குறைந்து கொண்டே வருகின்றது. அரசாங்கத்தின் அனுசரணையோடு தமிழ் மக்களுக்கு எதிரான அல்லது ஏற்றுக் கொள்ள முடியாதவாறு பலவிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட அதிகாரங்களின் அபகரிப்பு என்பன தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
ஆகவே இவற்றை நாங்கள் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களுடைய அதிகாரங்களை பலப்படுத்துவதற்கு முதற்கட்டமாக மாகாண சபைகள் அமைக்கப் பெறுவதும் அவசியம்.
அதற்குரிய நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்துள்ளோம். இன்றைய தினம் இவை பற்றி பலவிதமான கோணங்களில் நாங்கள் பேசியும் இருக்கின்றோம்.
விசேடமாக அரசியல் யாப்பில் எந்தெந்த உறுப்புரைகளின் அடிப்படையிலேயே இவற்றை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் முக்கியமாக 154 ரி இனுடைய ஏற்பாடுகளை நாங்கள் பரீட்சித்துப் பார்த்தோம்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.