குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1954 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகின்ற நிலையில் எல்லாவற்றை விடவும் சிறுவர்கள் பெறுமதியானவர்கள் என்பதை வலியுறுத்தி இலங்கையில் இன்று சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்த நாளில் நினைவுகூறப்படுகின்றது, சிறுவர் துஷ்பிரயோகம் உலகமெங்கிலும் அதிகரித்துள்ள நிலையில் இதனை இல்லாமல் ஒழிக்க பல நாடுகள் பல சட்டங்களை கொண்டுவந்தாலும் இது ஓய்ந்த பாடில்லை.
பல்வேறு செயற்பாடுகள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுவதால் எதிர்காலத்தில் அவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உண்டு.
சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும். பல சிறார்கள் இன்றைய நாளை சந்தோஷமாக கொண்டாடினாலும், நாம் அறியாத பல சிறு உள்ளங்கள் வேதனையிலும், சித்திரவதைகளிலும் தங்கள் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறான சிறுவர்களையும் நாம் இன்றைய நாளில் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இதேவேளை, இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.
முதியோர்களும் தமது காலத்தில் குழந்தைகள் சிறுவர்கள் போல் உள்ளதாலோ என்னவோ இந்த இரு தினங்களும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில்,முதன்; முதலாக 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது
வார்த்தைகள் தடுமாறினாலும் வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்களாவர். இன்றைய நவீன உலகில் முதியோரின் முக்கியத்துவம் உணரப்படுவதில்லை. இது துரதிஷ்டமானது.
முதியவர்களும், அவர்களின் கடைசிக் காலங்களில் அன்பை எதிர்பார்ப்பவர்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடைசி அத்தியாயத்தில் இருப்பவர்கள். ஆகவே இவர்களை நேசிக்கவும், மதிக்கவும் நாம் கற்றுக் கொள்ளவேண்டும்..
இதேவேளை கடந்த 20 ஆண்டுகளில் முதன் முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
உலகளவில் 160 மில்லியன் சிறுவர்கள் தொழிலாளியாக ,இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 80 மில்லியன் சிறுவர்கள் உடல் மற்றும் உள ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
வறுமையின் பொருட்டு சிறுவர்கள் வேலைக்குச் செல்வதைத் தடுப்பதற்கான வழி வயது வந்தவர்கள் தொழில்புரிவது மட்டுமே என்று தெரிவித்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு இதன் ஊடாக சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லும் வீதத்தையும் அதிகரிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில், காணப்படும் 4,571,442 சிறுவர் தொழிலாளிகளில் தற்போது வரையில் ஆபத்தான தொழிலில் ஈடுப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 39,007 எனவும் அதன் வீதம் 0.9 ஆகும். 2008ஆம் ஆண்டு அதன் எண்ணிக்கை 63,916 ஆக காணப்பட்டுள்ள நிலையில் அதன் சதவீதம் 1.3ஆக காணப்பட்டது.
எனினும், தற்போதுவரையில் இலங்கையினுள் ஆபத்தான தொழில் ஈடுப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.