இலங்கை அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு சர்வதேசம் பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகல் தொடர்பாக நேற்ற முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் குறித்து வடக்கு கிழக்கு மற்றும் உலக அரங்கில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் அச்சுறுத்தல் பல் வகையில் வழங்கப்பட்டு சட்டமா திணைக்களத்திற்கு வருகை தருமாறு கூறி அங்கே தீர்ப்பை மாற்றி அமைக்கும்படி கூறப்பட்டிருக்கிறது இதனை விட புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தீவிரம் , பாதுகாப்பு குறைக்கப்பட்டமை , சரத்வீரசேகர போன்ற இனவாதிகளால் அச்சுறுத்தல்கள் இவ்வாறான சூழ்நிலையில் பதவி விலகல் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
நீதிபதிக்கே இவ்வாறான அவலநிலை ஏற்பட்டால்; தமிழ் மக்களின் எதிர்காலத்தின் நிலைமை நன்றாக புலப்படுவதாகவும் தமிழ் மக்களை பொறுத்தவரை இருள் சூழ்ந்த நாடாகவே இலங்கை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சர்வதேசம் கவனத்தில் எடுத்து சுமூகமான , நியாயமான தீர்வு கிடைக்க ஆவனம் செய்ய வேண்டும் எனவும் அத்துமீறி இடம்பெறும் செயற்பாடுகள் குறித்தும் சர்வதேசம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.