”தனக்கு இலட்சினை ஒரு பிரச்சினை அல்ல எனவும்,எந்த கட்சியுடனும் இணையாமல் சுயாதீனமாக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாட்டிலுள்ள தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதாகவும்” நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த நாட்களில் எங்கு சென்றாலும் என்ன வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் அரசாங்கத்துடன் இருக்கின்றீர்களா எதிர்கட்சியுடன் இருக்கின்றீர்களா என்று அனைவரும் கேட்கின்றார்கள்.
நான் சுயாதீனமாக இருக்கின்றேன் நாடாளுமன்றத்தில் இருக்கின்றேன். மலையக மக்களின் பிரதிநிதியாக எனக்கு இளைக்கப்பட்ட அசாதாரணம் அனைவருக்கும் தெரியும்.
நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு ஜனாதிபதிதான் இருக்கின்றார். இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் சட்டங்களுக்கு அமைவாக சிறுபான்மையினரின் நாடாளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நான் கலந்தாலோசிக்க வேண்டும்.
ஏனைய திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அதிகளவான தோட்டப்புற மக்கள் பயனடைந்திருக்கின்றார்கள். எனக்கு இலட்சினை ஒரு பிரச்சினை அல்ல. மக்களுக்காக நான் அனைவருடனும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாட்டிலுள்ள தலைவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டியது என்னுடைய பொறுப்பு மற்றும் கடமையாய் இருக்கின்றது. அதனை தான் நான் தற்போது செய்துக் கொண்டிருக்கின்றேன்” இவ்வாறு வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.