வடமேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் உணவிலும் முட்டையை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பச்சைக் கஞ்சியின் தரத்தை மாற்றியமைக்க முடியும் எனினும் முட்டையில் அவ்வாறு மாற்ற முடியாது எனவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊட்டச்சத்தையும் வலிமையையும் அதிகரிக்க முடியும் என ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கால்நடை தீவன பிரச்னைக்கு உரிய அதிகாரிகளுடன் விவாதித்து விரைந்து தீர்வு காண்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.
மேலும், இந்தத் தொழில் நலிவடைவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும், ஏதேனும் பிரச்சினை இருந்தால் தன்னிடம் வந்து பேசித் தீர்க்கலாம் என்றும் ஆளுநர் கூறினார். முட்டைக்கான விலைக் கட்டுப்பாடு தேவை எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.