“அரசாங்கத்தினுடைய முகம் தற்போது மாற்றமடைந்துள்ளது” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவல்யனுக்கும் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (12) இடம்பெற்றது.|
இச் சந்திப்பில் பிரித்தானிய அமைச்சருடன் அந்த நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சீ.வீ.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன என்பது தொடர்பில் எங்களிடம் கேட்டிருந்தார்.
அப்போது நான் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் அவருக்குத் தெளிவுபடுத்தியிருந்தோம். அத்துடன் எங்களுடைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்கள் இருக்கும் தேவைகள் என்ன என்பது குறித்தும் பேசினோம். போரின் பின்னர் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களால் ஏற்பட்டுள்ள தேவைகள் என்ன என்பது சம்பந்தமாக போதுமான அறிக்கைகள் தயாரிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினோம்.
அதுமட்டுமல்லாது அரசாங்கத்தினுடைய முகம் தற்போது சற்று வித்தியாசமாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினோம். எனினும் வருங்காலத்தில் இவை மாற்றமடையக் கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் இரண்டு இனங்களையும் என்ன விதமாகச் சேர்த்து வைக்கலாம் என்பதற்கான வழிமுறைகள் இருக்கிறதா என்பதைப் பற்றியும் எங்களுடன் ஆராய்ந்தார்” இவ்வாறு சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.