ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொடவினால் குறித்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் விதிமுறைகளுக்கு அமைய 11 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அவைத்தலைவர் நியமிக்க வேண்டும் என்பதோடு எந்தவொரு நபரையும் ஆஜராக அழைப்பதற்கும், வாக்குமூலம் பெறுவதற்கும் குழுவிற்கு அதிகாரங்களை வழங்கவும் இந்த பிரேரணை முன்மொழிகிறது.
குழுவின் முதல் கூட்டத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குள் அல்லது நாடாளுமன்றம் வழங்கக்கூடிய அத்தகைய காலப்பகுதிக்குள் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.