இலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” சீனாவிடம் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பாக வெளியான தகவலில் உண்மைநிலை இருப்பது போல் தெரியவில்லை. என்னுடைய இராஜாங்க அமைச்சுக்கு தான் இலங்கை கடற்தொழில் கூட்டுதாபனத்தை கண்காணிக்கின்ற, செயற்படுத்துகின்ற பொறுப்பை கொடுத்திருக்கின்றேன். அவர் நேர்மையாக , நியாயமாக, சட்ட பூர்வமாக செய்ததாகத் தான் கூறுகின்றார்.
இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கையில் மிக குறுகிய அளவில் அறுவடை செய்யப்படுகின்ற அல்லது அறுவடை செய்யப்படாத மீன்களை தான் இறக்குமதி செய்ய வேண்டும் என இலங்கை கடற்தொழில் கூட்டுஸ்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தேன்.
நியாயமான விலையில், தரமானதாக, திணைக்களத்தின் சட்ட திட்டங்கள் உட்பட்டவையாக இருக்க வேண்டும். இவ்வாறே இறக்குமதி செய்ய முடியும் என கூறியிருக்கின்றேன். அந்தவகையில் தான் இறக்குமதி செய்ததாக கூறுகிறார்கள். அதில் முறைகேடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவ்வாறு இருக்குமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன்”இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.