போட்டித்தன்மையுடன் ஏற்றுமதியை அதிகரித்து சியட் களனி தொழிற்சாலையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
சியட் களனி வர்த்தகத்தின் 25ஆவது நிறைவு விழா நேற்று பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சியெட் – களனி வர்த்தகத்தை வெற்றிகரமான வணிகமாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “1993இல், சியெட் வர்த்தகம் இலங்கையில் நிறுவப்பட்டது. அடுத்த கட்டமாக சியெட் மற்றும் களனி டயர் நிறுவனங்களை இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நான் அவர்களை வாழ்த்துகிறேன். மேலும் போட்டித்தன்மையுடன் ஏற்றுமதியை அதிகரித்து தொழிற்சாலையை விஸ்தரிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கூட்டு முயற்சியானது வெற்றிகரமான இந்திய – இலங்கை ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பம் என்று கூறவேண்டும்.
மேலும், இலங்கை சந்தையில் பிரவேசிக்க விரும்பும் தரப்பினருக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் உள்ளது.
சியெட் களனி வர்த்தகத்தை வெற்றிகரமானதாக மாற்ற தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.