அரசியலைத் தவிர்த்து மாவீரர்களுக்கு தொண்டாற்ற முன் வாருங்கள் என மாவீரர் பணிக்குழுவின் முன்னாள் செயலாளர் ப.குமாரசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இக் கார்த்திகை மாதமானது எமது மக்களின் நிரந்தர விடியலுக்காக தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்களின் புனித மாதமாகும். எனவே தமது உயிர்களை துச்சம் என எண்ணி உயிர் தியாகங்களைச் செய்த எமது மாவீரர்களை நினைவு கூறுவதற்கு, எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்மற்றும் அரசியல் வேற்றுமைகளைக் கடந்து அனைவரும் முன்வரவேண்டும்.
குறிப்பாக தமது கட்சி அடையாளங்களையும் தனிநபர் விருப்பு வெறுப்புகளையும் அகற்றிவிட்டு தமிழர்களாக ஒன்று கூட வேண்டும். தமிழர்கள் அரசியல் கருத்துக்களில் வேறுபட்டிருந்தாலும் அவர்களின் ஆழ்மனது மாவீர தெய்வங்களின் கனவுகளோடும் அவற்றை நோக்கிய எண்ணங்களோடும் தொடர்கிறது என்பதனை உலகிற்கு ஒரே குரலில் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்.
எனவே மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு ஒன்றாக பொறுப்புடன் செயற்படுவோம். உன்னதமானவர்களின் ஆன்மாவின் வழிநடத்தலில் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம் ” இவ்வாறு ப.குமாரசிங்கம் தெரிவித்துள்ளார்.