முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எதிர்வரும் காலங்களில் மிக முக்கிய அரசியல் கட்சியுடன் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஆதரவை வழங்கினால், ஐக்கிய மக்கள் சக்தியும் அந்த முயற்சிகளுக்கு தனது ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வருவதை தமது கட்சி வரவேற்பதாகவும் எவ்வாறாயினும் அவர் மைத்திரிபால சிறிசேனவுடனோ அல்லது ராஜபக்சக்களுடனோ இணைந்து அரசியலில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தைரியம் பொதுஜன பெரமுனவிற்கு இல்லாத நிலையில் நாமல் ராஜபக்ஷ கூறிய கருத்து ஒரு நாடகம் என்றும் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் வரவு செலவுத் திட்டம் மக்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என்றும் நாட்டின் உழைக்கும் சமுதாயத்திற்கு அரசாங்கம் ஓரளவு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விஜேபால ஹெட்டியாராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.