எரிசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஈரானுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்தார்.
ஈரானின் புதிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நேற்று அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் ஈரான் தூதரகத்தின் பொருளாதார மற்றும் தூதரகப் பிரிவின் பிரதானி கே சொஹைல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதேநேரம், இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோர் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்,
இதன் மூலம் 10,000 இலங்கையர்களை பண்ணை தொழிலாளர்களாக உடனடியாக வேலைக்கு அமர்த்த இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 7 முதல், விவசாயத் துறையில் 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் சுமார் 8,000 வெளிநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலின் போது, அதிகளவான வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டதோடு, பலர் காஸாவில் பணயக்கைதிகளாகவும் பிடிக்கப்பட்டனர்.
அதே நேரம், சுமார் 20,000 பாலஸ்தீனிய விவசாய தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு அமைய முதல் இலங்கை விவசாயத் தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையைச் சேர்ந்த 4,500 தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.