மீண்டும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து நான் தீர்மானிக்கவில்லை. அது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே எனது முதன்மையான நோக்கம், அதன் பின்னர் நான் முடிவு செய்வேன்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பொருளாதாரம் தொடர்பாக உண்மையைப் பேசியதால்தான் தோற்கடிக்கப்பட்டனர்.
எனவே, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.
இதேவேளை திவால் நிலையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது, செயல்திறனை அதிகரிப்பது மற்றும் வழிமுறைகளுக்குள் வாழ்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதுவே திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம்.
பொருளாதார மீட்சியின் பார்வையில் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, பொருளாதார மீட்சியின் நோக்கத்துடன் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியாவின் அதானி குழுமம் ஆகியவை அண்மையில் மேற்கொண்டுள்ள முதலீட்டின் மூலம் நாட்டின் பொருளாதார மீட்சியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.